Thursday, July 2, 2009

சிகரம் தொட்ட காதல்!!

"ஏண்டா சரவணா, ஒரு மாதிரி இருக்கே? மேனேஜர்கிட்டே நீ திட்டு வாங்கி இன்னைக்கிதான் பார்த்தேன். என்ன பிரச்சனை? மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு மருகாதே. வெளியே சொன்னா மனப்பாரம் குறையும்." என்றான் சரவணின் நண்பன் நந்து.
"மனசே சரி இல்லைடா. பழைய நினைவுகளின் அதிர்வுகள் மனசோட ஓட்டத்தை நிறுத்திடுச்சுடா. வேலையிலே கவனம் செலுத்த முடியலை. அதான் லீவு போட்டு போயிடலாமான்னு யோசிக்கிறேன்.""என்னாச்சு?""அவள் என்னைவிட்டு போய் வருஷம் மூணு ஆச்சுடா"
"உன்னோட தனிப்பட்ட விஷயங்களில் நான் தலையிடுவதாக நினைக்காதேடா, அப்படி என்ன உன் வாழ்க்கையில் நடந்தது? என்மீது நம்பிக்கை இருந்தா உன் கவலைகளை என்னிடம் தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம் சரவணா" "நீ என்னோட நண்பன்டா! உங்கிட்டே பகிர்ந்துகரதுலே தப்பே இல்லை! இருந்தாலும் என் கஷ்டம் என்னோட போகட்டும்னுதான்....."
"என் தேவதை என்னோட கல்லூரிதான். எனக்கு ஒரு வருடம் ஜூனியர். கல்லூரி விழாவில் பாடினாங்க. பாட்டு மட்டும் அசத்தல் இல்லே; அவங்களும் அசத்தல் ரகம்தான். அறிமுகப் படுத்தியது என்தோழி. அவளிடமிருந்து எனக்கு கிடைத்த பரிசு மெல்லிய புன்சிரிப்பு. அவளின் அமைதியான முகம் அன்றலர்ந்த தாமரைபோல் இருந்தது. அன்றே என் மனதிற்குள் அவளின் நினைவுகள் சாமரம் வீசத் தொடங்கிவிட்டன. அதற்குப்பிறகு அவளை சந்திக்கும் வாய்ப்பும், பேசும் சூழ்நிலையும் அமையவில்லை. என்னோட கல்லூரி படிப்பும் முடிந்துவிட்டது. அவளின் பசுமையான நினைவுகளை ஆனந்தமாகச் சுமந்தேன் என்றுதான் கூற வேண்டும்."
"என்ன ஆச்சர்யம் பாரு! எதிர்பாராதவிதமாக ஒரு நாள் எனது அலுவலகத்திற்கே வேலைக்கு வந்தாள். அங்கே நான் அவளுக்கு சீனியர். ஆதலால் வேலைகள் அனைத்தும் சொல்லித்தரவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.அதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. நெருக்கத்தின் விளைவு இருவருள்ளும் ஏற்பட்ட ரசாயன மாற்றம் இருவராலும் கண்டு கொள்ளப்பட்டது. விளைவு? பரஸ்பரம் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம். எல்லாமாகிப் போன என் தேவதை என்றோ என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஷயம் எனக்கு மட்டும்தானே தெரியும்!"
"அலுவலக வேலைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவா இருந்திருக்கின்றோம். அலுவலக வேலை தவிர எங்கேயும் வெளியே போகமாட்டோம். வேலை அதிகமானால் சில நாட்கள் இரவு நேரமாகிவிடும். அந்த சமயம் அலுவலகத்தில் அவளுக்காக காத்திருந்து இருவரும் சேர்ந்தே வீட்டுக்கு கிளம்புவோம். எங்கள் காதல் எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும். அலுவலகத்தில் பாகுபாடின்றி அனைவருக்கு உதவிகள் செய்வேன். ஷாலினிக்கு செய்த உதவிகளும் அதே கோணத்தில்தான் பார்க்கப்பட்டன.. "
"அப்படித்தான் ஒரு நாள்.." சரவணனின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.
அலுவலகம் முடிந்து அனைவரும் கிளம்பி விட்டார்கள். ஷாலினி அவசரமாக மின்னஞ்சல் தயார் செய்து கொண்டிருந்தாள். நாளைய வேலையின் ஆரம்பம்தான் இந்த அவசரமான மின்னஞ்சல். சரவணன் வேலைகள் முடிந்ததால் அவள் அருகே வந்தமர்ந்து சில மாற்றங்களை கூறிக் கொண்டிருந்தான். ஒரு வழியாக வேலை முடிந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் இருவரும் கிளம்பினார்கள். "ஏன் ஷாலு, ரொம்ப சோர்வா இருக்கே ?" "தலை வலிக்குதுங்க ""வா, பக்கத்திலே இருக்கிற ஹோட்டல்ல காபி குடிச்சிட்டு உன்னை ஆட்டோலே ட்ராப் பண்றேன்."
"வேண்டாம், யாராவது பாத்துடுவாங்க. நம் விஷயத்தை நல்ல முறையில் அப்பாவிடம் சொல்லி சம்மதம் வாங்கணும். வேறு யாராவது பார்த்து அப்பாகிட்டே சொல்லி காரியம் கெட்டுடக்கூடாது." "பரவா இல்லே வா. தலைவலிக்குதுன்னு சொல்றே. அப்படியே உன்னை விட்டுட்டு போகச் சொல்றியா?"
"சரி, வாங்க போலாம் ஆனா சீக்கிரம் கிளம்பிடனும். ஐயோ! எங்க அண்ணன்""எங்கே?""ஐயோ என்னை பாத்துட்டானே! கிட்டே வரான்""ஷாலினி இங்கே எதுக்கு வந்தே? இது யாரு?" "இல்லே இவரு எங்க ஆபீஸ்.. எனக்கு தலை வலிக்குதுன்னு காபி குடிக்க வந்தோம்" என்று தடுமாறினாள் ஷாலினி "சரி குடிச்சுட்டு வா. வீட்டுக்கு போலாம்""தலை வலிக்குதுன்னு சொன்னாங்க ஷாலினி. காபி குடிக்கலாம்னு வந்தோம் ...." "நான் அவினாஷ். ஷாலினியோட அண்ணன். பரவாயில்லை வாங்க சேர்ந்தே காபி குடிக்கலாம்" என்று மிகவும் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தான் அவினாஷ். "நான் சரவணன்! நன்றி உங்களோட புரிதலுக்கு" காபி குடிச்சிட்டு ரெண்டு பேரும் போயிட்டாங்க.
"அடுத்தநாளும், அதற்கடுத்தநாளும் ஷாலினி அலுவலகம் வரவில்லை. எனக்கு ரொம்ப பயமா போய்டுச்சு. ஆனா, அன்று மாலை அவினாஷ் வந்தான். அவங்க அப்பா என்னை பார்க்கனும்னு அழைத்து வரசொன்னதாகச் சொன்னான். நானும் பார்க்கச் சென்றேன். எனது தேவதை என்னை வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்தாள். மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். என்ன என்று கேட்டேன். சரியாக பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டாள்."சில நிமிடங்களில் காபியும் பிஸ்கட்டும் வந்தது. கொஞ்ச நேரத்தில் ஷாலினியின் அப்பா வந்தார். மரியாதை நிமித்தம் எழுந்து நின்றேன். "உக்காருப்பா காபி சாப்பிடு! ஷாலினி நீயும் இப்படி வந்து உக்காரு.""பரவா இல்லை சார், நான் இப்போதான் அலுவலகத்திலே குடிச்சிட்டு வந்தேன்""இங்கே பாருப்பா சரவணா! என்பொண்ணு எல்லா விவரத்தையும் என்கிட்டே சொல்லிட்டா.." "இல்லேங்க சார்! என்னோட பெற்றோர்களை அழைத்து வந்து பெண் கேட்க வேண்டும்" என்று முடிக்கு முன்னே..
"அதெல்லாம் இருக்கட்டும், என்னோட சூழ்நிலையை உனக்கு சொல்லிடறேன். ஷாலினி அழகான, அடக்கமான பொண்ணு. பாக்கறவங்களுக்கு அவளை ரொம்பப் பிடிச்சிடும் அதெல்லாம் உணமைதான். இப்போது அவளுக்குத் திருமணம் செய்வதாக இல்லை."
"உங்களோட காதல் தவறுன்னு சொல்லலை. உன்னுடன் கூடிய ஷாலியின் நட்பை குறித்து உங்கள் அலுவலகத்திலே விசாரித்தேன். எல்லாரும் உங்களைப் பற்றி நல்ல விதமாகத்தான் கூறினார்கள். கண்ணியமாகத்தான் உங்கள் நடவடிக்கைகள் இருந்திருக்கின்றது."
"சரவணா! உங்க வீட்டிலேயும் காதல் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டங்காளாமே? உங்க தாய்மாமன் கூறி இருக்கிறாரு . உங்க ஊரிலே எங்க சொந்தக்காரங்க இருக்காங்க.உங்கள் குடும்பம் குறித்து விசாரித்ததில் இந்த வெவரம் தெரிஞ்சுது. காதலுக்கு நான் எதிரி இல்லை. ஆனால் மூன்று பெண்களைப் பெற்ற மத்தியதர குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண தந்தையாகப் பேசுகிறேன். நான் எந்த முடிவெடுத்தாலும் எனது சமூகத்திற்குக் கட்டுப்பட்டுதான் எடுப்பேன்."
"சார்..."
"இரு சரவணா நான் இன்னும் பேசி முடிக்கலை, இருமனமும் ஒத்துப் போனால் மட்டும் நிறைவான வாழ்வைத்தராது... அனைவரின் சந்தோஷத்திலும் மலர்வதுதான் வாழ்க்கை"
"இருவர் குடும்பத்திலும் சம்மதிக்கலைன்னா என்ன செய்ய போறீங்க? ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்குவீங்களா? அப்படி செய்தால் தாயில்லாம வளர்ந்த பொண்ணு இப்படி பண்ணிட்டாளேன்னு ஷாலினியை எல்லாரும் தவறாகப் பேசுவாங்களே அதை யோசிச்சீங்களா? மூத்தவள் எப்படி இருக்கிறாளோ அதை வைத்துதான் அவ தங்கச்சிங்களையும் எடை போடுவாங்க அதுவும் உண்மைதானே?" என்று மூச்சு விடாமல் பேசி நிறுத்தினார் நாராயணன். (ஷாலினியின் தந்தை) ."உங்க நிலைமை எனக்கு புரியுது சார், எனது பெற்றோர்களை சம்மதிக்க வைப்பது எனது பொறுப்பு. எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க "
"அது இல்லைப்பா அவங்க சம்மதித்தாலும் நான் சம்மதிக்க முடியாதே! எங்க சமூகத்தினர் இந்த திருமணத்திற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். அடுத்து எனது ரெண்டு பெண்களின் வாழ்க்கையும் இதில் அடங்கி இருக்கு. சூழ்நிலையை நீயே கொஞ்சம் யோசி."
"அதே போல் யாரும் ஒத்துக் கொள்ளாமல் திருமணம் செய்து செய்து கொண்டாலும் உங்கள் வாழ்க்கை சிறக்க வாய்ப்பில்லை. இரு தரப்பு பெற்றோர்களும் ஒதுக்குவார்கள், இரு தரப்பு உறவினர்களும் ஏற்றுக் கொள்வது கடினம். தேவைகள் எந்த ரூபத்திலும் வரலாம். நண்பர்கள் எவ்வளவு நாட்கள்தான் உங்களுக்கு உதவுவார்கள். "திருமணப்பதிவுஅலுவலகம்" வரை வருவாங்க. அப்புறம் ஒரு ரெண்டு நாட்கள் வரலாம். அதுக்கு மேல் அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போய்டுவாங்க. இதுதான் நிதர்சனம்."
"பணக்கஷ்டம்! கடன் வாங்கி சமாளிக்கலாம். மனகஷ்டம்! எப்படி தீர்க்க முடியும் சரவணா? இருவருகுள்ளே இருக்கும் குற்ற உணர்வு.அதுதான் நமது மனசாட்சி அதற்கு வேஷம் கட்ட தெரியாது. ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்குமே! அதை ஜெயிக்க முடியுமா உங்களால்? உறவினர்களின் பிரிவை அப்பட்டமாக வெளிப்படுத்தும். எவ்வளவு நாட்கள் தனிமையில் போராடுவீர்கள்.?"
"சிக்கல்கள் இல்லாதவரை வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களுக்குள் தீர்க்க முடியாத பிரச்சனைகள் வந்தால் யார் தீர்த்து வைப்பார்கள்? சட்டமா? ஒரே கோணத்தில் இருந்துகொண்டு வாழ்க்கையை சித்தரிக்கக்கூடாது. நான் பேசுவது எதிர் மறையாகத்தான் உங்கள் இருவருக்கும் இப்போது தெரியும். அதனால் என் மீது கோபம் கூட வரலாம். ஆனால் நான் கூறுவது அவ்வளவும் நிதர்சனம்."
"இன்றைய சந்தோஷம் மட்டும் நினைவில் கொண்டு நீங்கள் காரியம் மேற்கொண்டால், நாளைய சந்தோசம் யார் கையில் என்று சிறிதேனும் யோசித்தீர்களா? நீயாவது சொல்லும்மா! ஏன் பேசாமல் இருக்கிறாய்? "அழ அழ சொல்வார் தன மனுஷா சிரிக்க சிரிக்கச் சொல்லுவார் பிறர் மனுஷா" அப்படீன்னு பெரியவங்க சொல்லுவாங்க. இதன் முழு விளக்கம் புரியுதா? நான் கூறுவதில் ஏதேனும் நியாயம் இருப்பது போல் இருவரும் உணர்ந்தீர்களேயானால் சரியான முறையில் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாங்க." "நீங்க சம்மதிச்சீங்கன்னா சரவணன் அவங்க பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிடுவாருப்பா ப்ளீஸ்பா"
"ப்ளீஸ் போட்டு வாழ்க்கையை ஆரம்பிக்ககூடாதும்மா. அவர்கள் சம்மதித்தாலும் நானும், நமது உறவினர்களும் சம்மதிக்க மாட்டோம். இருவரும் யோசிச்சு முடிவெடுங்க. ஷாலினி சரவணனை சாப்பிடச் சொல்லி அனுப்பும்மா. நான் கடை வரை போயிட்டு வரேன். வரேன் சரவணா!"அமைதியை விழுங்கிய நாங்கள் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் நிலைகுலைந்து அமர்ந்திருந்தோம்."ஷாலினி கிளம்பறேன் ""இப்போ என்ன பண்ணறது சரண், எங்க அப்பா இப்படி சொல்லிட்டாரே?"
"உங்க அப்பா அவரோட கவுரவமும், சமுதாயமும்தான் முக்கியம்னு தெளிவா சொல்லிட்டாரு. அடுத்து திருமணமும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்காது. நாம ஓடிபோய் அவமானப்பட வேண்டாம். நாம் இருவரும் சந்திக்கவே இல்லைன்னு நினைச்சுக்குவோம். "உங்களாலே முடியுமா சரண்"
"முடியனும் ஷாலினி! நான் கிளம்பறேன்" முத்துக்களாக உருண்டு ஓடி வந்த கண்ணீரை அவளுக்கு தெரியாமல் மறைத்த அதே நேரத்தில் ஷாலினியும் விம்மிக்கொண்டு உள்ளே ஓடுவதும் சரவணனுக்கு தெரிந்தது. "அதற்குப்பின் அவளை நான் சந்திக்கவில்லை" இந்த ஊருக்கு வந்துட்டேன் என்று பெருமூச்சு விட்டான் சரவணன். "சரவணா என்ன சொல்றதுன்னே தெரியலைடா..! ஆனா உங்க காதல் சிகரத்தைத் தொட்ட காதல்தாண்டா!"

No comments:

Post a Comment